சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.270   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்

-
வையம் புரக்குந் தனிச்செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும்
செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல்
புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும்
ஏறூர் ஏமப் பேறூரால்.

[ 1]


இந்நிலவுலகைக் காவல் புரியும் தனிச் செங்கோலை உடைய சோழர்களின் காவிரித் திருநாட்டில், செந்தாமரை மலர்கள் நிறைந்த குளங்களையுடைய பெருவயல்களையும், செழுமையான நீர்ப் பொய்கைகளையும் எப்பக்கங்களிலும் கொண்டதாகி, பொய்ப் பொருளினின்றும் நீக்கி மெய்ப்பொருளைக் கூறும் அரிய நான்மறை களிலும் அவற்றின் வழிப்பட்ட நூல்களிலும் கூறப்பட்டுள்ள நெறி முறைகளை இடைவிடாமல் எண்ணிச் செய்யும் நல்ல ஒழுக்க முடையவரின், புகழால் வரும் பெருமையானது எல்லாத் திசைக ளிலும் பரவிச் செல்கின்ற ஊர், ஏமப்பேறூர் என்பதாகும்.
*** ஏமப்பேறூர் - திருவாரூருக்குத் தெற்கே 4 கி. மீ. தொலைவில் உள்ளது. இதுபோது திருமப்பற்று என்று வழங்கப் பெறுகிறது.
நெய் கிடையாத பொழுது நீரையே நெய்யாகக் கொண்டு விளக்கு எரித்த இவ்வடியவர் நினைவாக, நெய்ப்பேறு என வழங்கப் பெற்றுக் காலப்போக்கில், திருமப்பற்று என வழங்கலாயிற்று. அடியவர் வரலாற்றை நினைவு கூரும் திருப்பெயரை மீண்டும் அவ்வூர் பெறத் திருவருள் கூட்டுவிக்குமாக.

மாலை பயிலும் தோரணங்கள்
மருங்கு பயிலும் மணிமறுகு
வேலை பயிலும் புனல்பருகு
மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்தஇருள்
சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேதஒலி
கழுநீர் பயிலும் செழுநீர்ச்செய்.

[ 2]


அழகிய வீதிகளின் இருமருங்கும் மாலைகள் மிகத் தொங்கவிடப்பட்ட தோரணங்கள் விளங்கும். மாளிகைகளின் மீது, கடலில் நீரையுண்ணும் மேகங்கள் தவழும். குளிர்ந்த இருண்ட நிழற் சோலைகளினூடே பெரிதும் விளங்கும் அரிய பாக்கு மரங்களில், வண்டுகள் மொய்க்கும். உரிய காலங்களில், நான்மறைகளின் ஒலி மிக்கு ஒலிக்கும். செழிப்பான நீர் நிறைந்த வயல்களில், கழுநீர் மலர்கள் விளங்கும்.

குறிப்புரை: சோலைகளில் இருள் மிக்கிருப்பது அங்குள்ள மலர்ச் செடிகளின் நெருக்கத்தைக் காட்டும்,'இருள் வளைப் புண்ட மருள்படு பூம் பொழில்' என வருவதும் காண்க.

பணையில் விளைந்த வெண்ணெல்லின்
பரப்பின் மீது படச்செய்ய
துணர்மென் கமலம் இடைஇடையே
சுடர்விட் டெழுந்து தோன்றுவன
புணர்வெண் புரிநூ லவர்வேள்விக்
களத்தில் புனைந்த வேதிகைமேல்
மணல்வெண் பரப்பின் இடைஇடையே
வளர்த்த செந்தீ மானுமால்.

[ 3]


வயல்களில் விளைந்த வெண்மையான நெற்பயிர் களினிடையே, சிவந்த பல மெல்லிதழ்களையுடைய தாமரைப் பூக்கள் இடையிடையே ஒளிவிட்டு மேல் எழுந்து தோன்றுவது, பொருந்திய வெண்மையான முப்புரிநூல் அணிந்த வேதியர்களின் வேள்விக் களத்தில் அழகுடன் அமைத்த வேதிகை மீது, வெண்மையான மணலைப் பரப்பி, இடையிடையே வளர்த்த செந்தீயை ஒத்திருக்கும்.

குறிப்புரை: வயல் வேள்விச் சாலைக்கும், வெண்நெல் பரப்பு அதன்மீது பரப்பப்படும் வெண்மணலுக்கும், அதன்மீது இடை யிடையே படர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் அவ்வெண் மணலின் மீது வளர்க்கப் பட்ட தீயினுக்கும் உவமையாம். மானும் - ஒக்கும். ஆல் - அசைநிலை.

பெருமை விளங்கும் அப்பதியில்
பேணும் நீற்றுச் சைவநெறி
ஒருமை வழிவாழ் அந்தணர்தம்
ஓங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை உலகும் ஈசர்கழல்
இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி
அடிகள் என்பா ராயினார்.

[ 4]


பெருமையுடன் விளங்கும் அப்பதியில், போற்று கின்ற திருநீற்றுச் சார்புடைய சைவ நெறியில் ஒன்றிய உணர்வுடன் வாழும் அந்தணர்களின் சிறந்த குலத்தில் தோன்றியவராய், இம்மை யிலும் அம்மையிலும் சிவபெருமான் திருவடிகளையே வணங்கி வாழ்த்தும் பேறுடைய தவத்தை இடைவிடாது மேற்கொண்டு ஒழுகி, அதனை அரிய வகையால் போற்றி வருபவராய், வாழ்ந்து வருபவர் நமிநந்தி அடிகள் என்பவராவர்.

குறிப்புரை: இருமை உலகு - இம்மையும் அம்மையுமாகிய உலகு.

வாய்மை மறைநூல் சீலத்தால்
வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்
தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப்
பொருளென் றறியுந் துணிவினார்
சாம கண்டர் செய்யகழல்
வழிபட் டொழுகும் தன்மைநிலை
யாம இரவும் பகலும்உணர்
வொழியா இன்பம் எய்தினார்.

[ 5]


வாய்மை பொருந்திய மறை நூல்களிலும், அவற்றின் வழிவந்த நூல்களிலும் கூறப்பெற்றிருக்கும் ஒழுக்கத்தால் வளர்க்கப் படும் 'செந்தீயாவார்' இவர் எனக் கூறப்படும் தகுதி உடையவர். தூய திருநீற்றின் சார்பே மெய்ப்பொருளாவது எனத் துணிந்து, அந்நெறியை மேற்கொண்டொழுகும் அறிவுடையவர். சாம வேதத்தை அருளியவரான சிவபெருமானின் சிவந்த திருவடி களையே வழிபட்டு ஒழுகும் தன்மையை, இரவிலும் பகலிலும் உணர்ச்சியில் கொள்வதால் வரும் இடைவிடாத இன்பத்தைப் பெற்றிருப்பவர்.

குறிப்புரை: வேள்வித்தீயை இடைவிடாது வளர்த்து வருதலின் அவரை அத்தீயேயாவர் எனக் குறித்தார் ஆசிரியர்.

Go to top
அவ்வூர் நின்றும் திருவாரூர்
அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்தன்
விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமும் எனக்கொள்ளும்
எண்ணம் உடையார் பலநாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்
திருப்பா தங்கள் வணங்கினார்.

[ 6]


அவ் ஏமப்பேறூரினின்றும் திருவாரூரை அடைந்து, அங்கு எழுந்தருளியிருக்கும், பகைவரின் முப்புரங்களையும் எரித்த மேருமலையான வில்லை ஏந்திய சிவபெருமானின் திருவடிகளை நாடொறும் வணங்கிவரும் பேறுடைய அவர், அடியவர் மேல் வரும் கொடிய தீமைகளைப் போக்கி அருளும் அப்பெருமானின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளைப் பணிவதே, உயிர் பெறுதற்குரிய எல்லா வகையான ஊதியமும் ஆகும் எனக் கொள்ளும் எண்ணம் உடையவர்.

குறிப்புரை: வரதர் பொற்றாள் தொழ வந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியைச் சாருமால் (தி. 12 பாயிரம் பா. 2) என்ப தால், உயிர்பெறும் ஊதியம் இறைவனை இடைவிடாது வணங்கி வருவதேயாம்.

செம்பொற் புற்றின் மாணிக்கச்
செழுஞ்சோ தியைநேர் தொழுஞ்சீலம்
தம்பற் றாக நினைந்தணைந்து
தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோந்
தம்பொற் புரிசைத் திருமுன்றில்
அணைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர்க் கிடமாங் கோயிலினுள்
புக்கு வணங்க நண்ணினார்.

[ 7]


சிவந்த பொன் போன்ற புற்றில் வீற்றிருக்கும் மாணிக்க ஒளியைப் போன்ற இறைவரை நேரில் கண்டு வழிபடும் நல் ஒழுக்கமே தமக்கு உறுதியாவது என்று எண்ணிச் சார்ந்து, நிலம் பொருந்த விழுந்து வணங்கி, அதனால் வாழ்வின் பயனை அடைந்து, வெளியே வந்து, பொன்மதில் சூழ்ந்த திருமுற்றத்தில் சிவபெரு மானுக்கு இடமான அரனெறி என்னும் திருக்கோயிலுள் புகுந்து வணங்குதற்குச் சென்றார்.

குறிப்புரை: திருவாரூர்த் திருக்கோயிலின் முற்றத்தில் உள்ள 'அரனெறி' என்பது தனிக் கோயிலாகும். திருவாரூர்க் கோயிலின் வேறாக வைத்துப் போற்றப் பெறுவது.

நண்ணி இறைஞ்சி அன்பினால்
நயப்புற் றெழுந்த காதலுடன்
அண்ண லாரைப் பணிந்தெழுவார்
அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்குபல
பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்
கெடுத்த கருத்தின் இசைந்தெழுவார்.

[ 8]


சென்று வணங்கி, அன்பு மீதூர்ந்த பத்திமையுடன் பெருமையுடைய இறைவரைத் தாழ்ந்து எழுவார், அடுத்து நிகழ இருக்கும் விளைவின் அறிகுறியாக மனத்தில் எழுந்த குறிப்பால் தாம் செய்து வரும் திருத்தொண்டின் பாங்கு பலவும் செய்து போற்றி அங்குத் தங்குவாராய், எண்ணற்ற விளக்குகளை ஏற்றவேண்டும் என மனத்துள் ஏற்பட்ட கருத்திற்கு இயைய அதைச் செய்ய முற்படு வாராய்.

குறிப்புரை:

எழுந்த பொழுது பகற்பொழுதங்
கிறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியி னிடையப்பாற்
செல்லிற் செல்லும் பொழுதென்ன
ஒழிந்தங் கணைந்தோர் மனையில்விளக்
குறுநெய் வேண்டி உள்புகலும்
அழிந்த நிலைமை அமணர்மனை
ஆயிற் றங்கண் அவருரைப்பார்.

[ 9]


அவ்வாறு துணிந்து எழுந்த பொழுது, மாலைப் பொழுதாக அமைதலும், செழுமைமிக்க அத்திருவாரூருக்கு அப்பால் உள்ள தம் ஏமப்பேறூருக்குச் சென்றுவரின், பொழுது சென்றுவிடும் எனக் கருதி அந்நினைவை விடுத்துத் திருவாரூரிலேயேயிருந்து விளக்கிற்கு நெய் பெறுதலை வேண்டி, ஓர் இல்லத்துள் புகவும், அது மெய்யுணர்வற்ற சமணரின் இல்லமாய் இருக்க, அவரிடத்து வேண்ட அவரும் கூறுவாராய்.

குறிப்புரை: பதியினிடை அப்பாற் செல்லின் - திருவாரூருக்கு அப்பாலுள்ள தம் ஏமப்பேறூருக்குச் செல்லின். ஒழிந்து - அங்குச் செல்லுதலை விடுத்து.

கையில் விளங்கு கனலுடையார்
தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ
ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்
குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும்
பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார்.

[ 10]


'தெளிவின்றி ஒரு பொருளே பொய்யும் மெய்யுமாகும்' என்ற கொள்கையுடன் குற்றமுடைய நெறியைப் பேணிவரும் அச்சமணரும், 'கையில் விளங்கும் தீயை ஏந்திய சிவபெருமானுக்கு விளக்கு மிகையாகும், விளக்குக்கு நெய் இங்கு இல்லை! நீவிர் விளக்கு எரிப்பீரானால் நீரை முகந்து எரிப்பீராக!' என்று திருத்தொண்டருக்குக் கூறினார்.

குறிப்புரை: கடவுளாகிய ஒரு பொருளே உண்டு; இல்லையுமாம் என்பது அமணர் கொள்கை. இதனை அஸ்தி நாஸ்தி என்னும் தொடரால் கூறுவர். இறைவர் தம் திருக்கையில் நெருப்பைக் கொண்டிருப்பது உயிர்கட்குற்ற வினைகளைப் படிப்படியாகப் போக்கவும் அதனால் முழுமையாக வினைநீக்கம் பெறச் செய்து தம் திருவடிகளில் திளைக்கச் செய்தலுமாகிய அருட்கருணையினாலே யாம். இவ்வாறாய கருத்தை உணராத அச்சமணர்கள், இறைவர் அந்நெருப்பைத் தமக்கெனக் கொண்டதாகக் கருதியது அவர்தம் பேதைமையாலாம். 'வல்வினையைச் சுட்டு' (உண்மை விள. ,37) என்றும், 'சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்'(உண்மை விள. , 36)என்றும் கூறும் மெய்ந்நூற் கூற்றுக்களைக் காண்க. அன்றியும் இறைவன் ஒளிவளர் விளக்காக விளங்குபவன். அருநிலைய திங்களா கவும் ஞாயிறாகவும் விளங்குபவன். ஆதலின் அப்பெருமானுக்குத் தன் பொருட்டாக விளக்கோ பிறவோ எவையும் வேண்டுவனவல்ல. உயிர்களாகிய நாம் உய்யவும் விளக்கம் பெறவுமே விளக்கிடுதல் போன்றவற்றைச் செய்கின்றோம். இவையெல்லாம் அச்சமணர்கள் அறியப்போமோ? இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

Go to top
அருகர் மதியா துரைத்தவுரை
ஆற்றா ராகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன்
பெயர்ந்து போந்து பிறையணிந்த
முருகு விரியும் மலர்க்கொன்றை
முடியார் கோயில் முன்எய்தி
உருகும் அன்பர் பணிந்துவிழ
ஒருவாக் கெழுந்த துயர்விசும்பில்.

[ 11]


மேற்கூறியவாறு சமணர் மதியாமல் சொன்ன சொல்லைக் கேட்டுப் பொறுத்துக் கொள்ள இயலாதவராகி, அது பொழுதே மனத்தில் பொருந்தும் வருத்தத்துடன் அங்கிருந்து நீங்கிச் சென்று, பிறையைச் சூடியும் மணம் வீசும் கொன்றை மலரை அணிந்தும் விளங்கும் சடையையுடைய சிவபெருமானின் திருக்கோயில் முன்பு சேர்ந்து, உள்ளம் உருகிய நிலையில் நமிநந்தியடிகள் பணிந்து வீழ்ந்தார். அவ்வமையத்தில் வானத்தினின்றும் ஒரு திருவாக்கு எழுந்தது.

குறிப்புரை: முருகு - நறுமணம்.

வந்த கவலை மாற்றும்இனி
மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர்
முகந்து கொடுவந் தேற்றுமென
அந்தி மதியம் அணிந்தபிரான்
அருளால் எழுந்த மொழிகேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி
அடிகள் செய்வ தறிந்திலரால்.

[ 12]


'உமக்கு உண்டான கவலையை மாற்றிக் கொள்ளும்; இனி இடையீடின்றித் திருவிளக்குப் பணியைச் செய்வ தற்கு அருகில் உள்ள இக்குளத்தின் நீரை முகந்து கொணர்ந்து விளக்கை ஏற்றும்' என்று, மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமானின் அருளால் எழுந்த அத்திரு வார்த்தையைக் கேட்டு, நமிநந்தியடிகள் மனம் மகிழ்ந்து செய்வது அறியாமல் நின்றார்.

குறிப்புரை: மாறா விளக்கு - இடையீடின்றி எரியும் விளக்கு. பணிமாற - பணி செய்தற்கு.

சென்னி மிசைநீர் தரித்தபிரான்
அருளே சிந்தை செய்தெழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு
நாதர் நாமம் நவின்றேத்தி
அந்நீர் முகந்து கொண்டேறி
அப்பர் கோயில் அடைந்தகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப
முறுக்குந் திரிமேல் நீர்வார்த்தார்.

[ 13]


தலையில் கங்கையை அணிந்த சிவபெருமானின் பேரருளை எண்ணியவாறு எழுவாராகி, நல்ல நீரை உடைய அக் குளத்தின் நடுவிற் சென்று, இறைவரின் திருப்பெயரான திருவைந் தெழுத்தைக் கூறிப் போற்றிய வண்ணம் நீரை முகந்து எடுத்துக் கொண்டு, மேல் ஏறி, இறைவன் எழுந்தருளியிருக்கும் அரன்நெறிக் கோயிலை அடைந்து, கடல் சூழ்ந்தவுலகத்து வாழ்வார் யாவரும் வியந்து காணும்படி, அகலுள் முறுக்கி இடப்பட்ட திரியின்மீது அந் நீரை வார்த்தார்.

குறிப்புரை: நாமம் - திருவைந்தெழுத்து; 'திருநாமம் ஐந்தெழுத் தும்' (தி. 6 ப. 95 பா. 6) 'நாதன் நாமம் நமச்சிவாயவே!' (தி. 3 ப. 49 பா. 1) என்னும் திருவாக்குகளை நினைவு கூர்க.

சோதி விளக்கொன் றேற்றுதலும்
சுடர்விட் டெழுந்த ததுநோக்கி
ஆதி முதல்வர் அரனெறியார்
கோயில் அடைய விளக்கேற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிருங் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு
நீரால் எரித்தார் நாடறிய.

[ 14]


நீர்வார்த்த அவ்வகல் விளக்கு ஒன்றில் தீயை ஏற்றலும், அது சுடர் விட்டு மேலோங்க எழுந்து எரிந்தது. அதைக்கண்டதும் ஆதி முதல்வரான அரனெறியப்பரின் திருக் கோயில் முழுவதும், அடாத மொழிகளைக் கூறிய சமணர்களின் எதிரில், மேலோங்கிய மகிழ்ச்சியுடன் எங்கும் நீர்வார்த்துத் திருவிளக் குகளை ஏற்றுவித்து, இறைவரின் திருவருளால் நாடு முழுவதும் அறியுமாறு அவ்வாறாய திருவிளக்கிடும் பணியைச் செய்து வந்தார்.

குறிப்புரை: அடைய - முழுதுமாக. அத்திருக்கோயில் எங்கும்.

நிறையும் பரிசு திருவிளக்கு
விடியும் அளவும் நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாம்
கொள்ள வேண்டும் நீர்வார்த்து
மறையின் பொருளை அர்ச்சிக்கும்
மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே
அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.

[ 15]


விடியுமளவும் திருவிளக்குகள் அணையாமல் நின்று எரியும் பொருட்டு, எரியும் விளக்குகளில் நீர் குறையும் பொழுதெல்லாம் அந்நீர் நிறையும்தன்மையினால் நன்கு எரியும் அளவுக்கு ஏற்றவாறு கொள்ளத் தக்க நீரை வார்த்து, மறையின் பொருளாக விளங்கும் சிவபெருமானைத் தம் இல்லத்தில் எழுந்தரு ளச் செய்துவழிபாடாற்றி வரும் நியதி தவறாமல் தாம் வாழும் ஏமப்பேறூர் என்னும் ஊருக்குச் சென்று, இறைவரைத் தொழுது அன்றிரவே புறப்பட்டார்.

குறிப்புரை: தகளி - அகல்; நமிநந்தி அடிகள் திருக்கோயிலில் விளக்கிடும் பணியைச் செய்து வருவதோடு, தம் இல்லத்திற்குச் சென்று நாளும் சிவவழிபாட்டையும் தவறாது செய்துவரும் கடப்பா டுடையவர் என்பது இதனால் விளங்கும்.

Go to top
இரவு சென்று தம்பதியில்
எய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழில்முறையே
விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்தருளிப்
பள்ளி கொண்டு புலர்காலை
அரவம் அணிவார் பூசையமைத்
தாரூர் நகரின் மீண்டணைந்தார்.

[ 16]


அன்றிரவே தம்நகருக்குச் சென்று மனையுள் புகுந்து நாள்தோறும் தாம் ஆற்றிவரும் சிவவழிபாட்டை முறையாகச் செய்து, இறைவரை வழிபட்டுப் போற்றிப், பின்பு திருவமுது செய்தருளிப் பள்ளிகொண்டு, விடியலில் எழுந்து, பாம்பை அணிந்த இறைவரின் வழிபாட்டை முறையாக முடித்துக் கொண்டு, திருவாரூர்த் திருநகரத்தை மீண்டும் வந்து அடைந்தார்.

குறிப்புரை:

வந்து வணங்கி அரனெறியார்
மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக்
கெங்கும் ஏற்றி அடிபணிவார்.

[ 17]


வந்து அரனெறியப்பர் பெரிதும் மகிழ்ந்து வீற்றி ருக்கும் கோயிலை வலமாக வந்து, மனமகிழ்ச்சியுடன் கீழே விழுந்து வணங்கிப் பணிந்து எழுந்து, கோயிலின் உள்ளும் புறமுமாகச் செய் யக் கூடிய பல பணிகளையும் முன்னதாக அந்நாளின் பகற் காலத்தில் முழுமையாகவும் முறையாகவும் பொருந்தச் செய்து முடித்து, அந்தணரான நமிநந்தியடிகள் மாலைக்காலம் வர, அது பொழுது அரிய திருவிளக்குகளை ஏற்றித் திருவடிகளைப் பணிவாரானார்.

குறிப்புரை:

பண்டு போலப் பலநாளும்
பயிலும் பணிசெய் தவர்ஒழுகத்
தண்டி அடிக ளால்அமணர்
கலக்கம் விளைந்து சார்வில்அமண்
குண்டர் அழிய ஏழுலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர்கழல்
அமரர் பணியும் அணியாரூர்.

[ 18]


முன்பு போலவே பல நாள்களிலும் பொருந்தும் பணிகள் பலவும் செய்து இவர் ஒழுகி வர, தண்டி அடிகளால் சமணர் களுக்குக் கலக்கம் நேர்ந்ததால், நற்சார்பு இல்லாத சமணர்களான கீழ்மக்கள் அழிந்தொழிந்தனர். தேவர்க்கும் தலைவரான இறைவனின் திருவடிகளை நாளும் தேவர்கள் போற்றுதற்கு இடமான திருவாரூரில், ஏழ் உலகங்களும் போற்றும் பெருமை விளங்கியது.

குறிப்புரை: சமணர்கள், தண்டி அடிகளால் அழிந்தமை அவர் வரலாற்றான் அறியத்தக்கது. அவர் வரலாற்றை இயைத்துக் கூறுவதால் இவர்களிருவரும் ஒருகாலத்தவர் என உணரமுடிகின்றது.

நாத மறைதேர் நமிநந்தி
அடிக ளார்நற் தொண்டாகப்
பூத நாதர் புற்றிடங்கொள்
புனிதர்க் கமுது படிமுதலாம்
நீதி வளவன் தான்வேண்டும்
நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான்
வேதா கமநூல் விதிவிளங்க.

[ 19]


ஒலி வளம் சான்ற நான்மறைகளையும் கற்றுத் தெளிந்த நமிநந்தியடிகளின் நல்ல தொண்டின் பயனாக, உயிர்களின் தலைவரான புனித இறைவற்கு, நாள்தோறும் திருவமுதுபடி முதலாக வேண்டியபடியே அறக்கட்டளைகள் பலவற்றையும், நான்மறைகளிலும் ஆகமங்களிலும் விதித்தவாறே விளங்கும்படி, அறவழி ஒழுகும் சோழன் தன் அரியணையில் வீற்றிருந்து அமைத்தான்.

குறிப்புரை: நமிநந்தியடிகள் செய்துவந்த தொண்டின் பயனாகத் திருவருள் விளக்கம் கண்ட சோழ அரசனும் திருவாரூர்ப் பெருமா னுக்கு நாள் வழிபாடு நிகழப் பல அறக்கட்டளைகளை நிறுவினன். இவ்வரசன் பெயர் தெரிந்திலது.

வென்றி விடையார் மதிச்சடையார்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
என்றுந் திருவா ரூர்ஆளும்
இயல்பின் முறைமைத் திருவிளையாட்
டொன்றுஞ் செயலும் பங்குனிஉத்
திரமாந் திருநாள் உயர்சிறப்பும்
நின்று விண்ணப் பஞ்செய்த
படிசெய் தருளும் நிலைபெற்றார்.

[ 20]


வெற்றி பொருந்திய ஆனேற்றை உடையவரும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவரும் ஆன வீதிவிடங் கப் பெருமான் என்றும் திருவாரூரினை ஆட்சி செய்யும் இயல்பில், நெறி திறம்பாது அருளிய திருவிளையாடற் செயல்களையும், பங்குனி உத்தரத் திருநாளில் நிகழும் உயர்ந்த திருவிழாவையும், நிலைபெற விழாக் கொண்டருள வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப் பித்துக் கொள்ள, பெருமானும் திருவுளம் கொண்ட நிலையில் அவ்வாறே விழாக் கொண்டருளும் நிலைமையையும் நமிநந்தியடிகள் பெற்றார்.

குறிப்புரை: ஆரூர்ப்பெருமான் அருளிய விளையாடல்களைத் தியாகராச லீலை என்பர். இவ்விளையாடல்களைத் திருக்கோயிலில் நிகழ்த்திக் காட்டவும் பங்குனி உத்தரப் பெருவிழா ஆண்டு தோறும் நிகழவும் திருவுள்ளம் கொள்ளுமாறு இறைவனிடம் நாயனார் விண் ணப்பித்துக் கொள்ள இறைவனும் ஏற்றார். இதற்கேற்ப அரசனும் நிபந்தம் அளித்தனன் எனத் தெரிகிறது. எனவே முன்பாடலில் கூறியவாறு நாள் (நித்தியம்) வழிபாட்டிற்கும், இப்பாடலிற் கூறியவாறு சிறப்பு (நைமித்தியம்) வழிபாட்டிற்கும் சோழ அரசன் நிபந்தம் அளித்தமை விளங்கும்.

Go to top
இன்ன பரிசு திருப்பணிகள்
பலவுஞ் செய்தே ஏழுலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர்
மன்னர் அடியார் வழிநிற்பார்
அன்ன வண்ணந் திருவிளையாட்
டாடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்தி
அடிகள் தொழுதார் நாம்உய்ய.

[ 21]


இவ்வாறு நமிநந்தியடிகள் பற்பல பணிகளையும் செய்து ஒழுகிவர, ஏழுலகங்களிலும் நிறையும் பெருமையுடைய திருவாரூர்ச் செல்வத் தியாகேசர், அடியவர்களின் அன்பின் வழியே நிற்பவராதலின், அப்பெருமானும் அடிகள் தம்மிடம் விண்ணப்பித்துக் கொண்ட வண்ணமே திருவிளையாடல்களைக் கொண்டருள, அடிக ளும் எந்நாளும் எல்லா நன்மைகளும் பெருக அவரை வணங்கி வந்தார்.

குறிப்புரை: திருவிளையாட்டாடி வருதல் - இறைவன் செய்த திருவிளையாடல்களை விழாவாகக் கொண்டாடி வருதல். இதனை ஐதிகத் திருவிழா என்பர்.

தேவர் பெருமான் எழுச்சிதிரு
மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவ ரென்னா துடன்சேவித்
தெல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமுமுடன்
சேவித் தணைந்து விண்ணவர்தம்
காவ லாளர் ஓலக்கம்
அங்கே கண்டு களிப்புற்றார்.

[ 22]


தேவரின் தலைவரான தியாகேசப் பெருமான் எழுச்சியாய் ஒருநாள் திருமணலிக்கு எழுந்தருள, இவர் இன்னவர் என்று கண்டறிய இயலாதவாறு எல்லாக் குலத்தில் உள்ளவர்களும் ஒருங்கு கலந்து அவ்விழாவில் உடன்வர, நமிநந்தி அடிகள் அவர்க ளுடன் சென்று வணங்கி, தேவர்களின் காவலரான தியாகேசரின் திருக்கோலத்தை அங்கே கண்டு மகிழ்வு எய்தினார்.

குறிப்புரை: திருவாரூர்க்கும் ஏமப்பேறூர்க்கும் அணித்தாக உள்ள ஊர் மணலியாகும். ஆண்டுக்கு ஒருமுறை தியாகேசர் அங்கு எழுந் தருளும் வழக்கம் முன் இருந்தது. காலப் போக்கில் அது நின்று விட்டது. மீண்டும் தொடரத் திருவருள் கூட்டுவதாக.

பொழுது வைகச் சேவித்துப்
புனிதர் மீண்டுங் கோயில்புகத்
தொழுது தம்மூர் மருங்கணைந்து
தூய மனையுள் புகுதாதே
இழுதும் இருள்சேர் இரவுபுறங்
கடையில் துயில இல்லத்து
முழுதுந் தருமம் புரிமனையார்
வந்துள் புகுத மொழிகின்றார்.

[ 23]


பகல் பொழுதெல்லாம் வணங்கி மகிழ்ந்த வண்ணம் இருந்த நமிநந்தி அடிகள், இறைவன் மீளத் தம் கோயிலுக்கு எழுந்தருளவும் அவரைத் தொழுது தம் பதியினை அடைந்து, தூய தம் திருமனைக்குள் புகாமல் மைக்குழம்பெனச் செறிந்த இருள் மிக்க இரவில் இல்லத்தின் வெளியே உறங்கினார். அதுபொழுது இல்லறக் கடன்களை முழுமையாகச் செய்துவரும் மனைவியார் வந்து தம் தலைவரை உள்ளே வருமாறு கூற.

குறிப்புரை: இழுது - மைக்குழம்பு. 'கருகுமையிருளின் கணம் கட்டு விட்டு உருகுகின்றது போன்றது' (தி. 12 பு. 4 பா. 15),
'வண்ணம் நீடிய மைக்குழம் பாமென்று நண்ணல் செய்யா நடுஇருள்'(தி. 12 பு. 4 பா. 16) எனவரும் ஆசிரியர் திருவாக்குகளை யும் காண்க.

திங்கள் முடியார் பூசனைகள்
முடித்துச் செய்யுங் கடன்முறையால்
அங்கி தனைவேட் டமுதுசெய்து
பள்ளி கொள்வீர் எனஅவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்
கெழுச்சி சேவித் துடன்நண்ண
எங்கும் எல்லா ரும்போத
இழிவு தொடக்கிற் றெனைஎன்று.

[ 24]


'பிறைச் சந்திரனை அணிந்த திருச்சடையை யுடைய சிவபெருமானுக்கு ஆற்றிவரும் வழிபாடுகளை முடித்து, முறையாக ஆற்றிவரும் கடனான வேள்வியையும் செய்துபின் உறங்குவீராக' என்று கூறினார். இவ்வாறு உரைக்க, அவருக்கு, 'தம் தலைவரான இறைவர் மணலிக்கு எழுந்தருளிய திருவிழாவிற்குச் சென்று வணங்கிய பொழுது எல்லாரும் கலந்து இருக்க நேர்ந்ததால் தூய்மை யிழந்துள்ளேன்' என்று கூறி.
குறிப்புரை: இறைவனின் திருவிழாக்காணத் தூய்மை இல்லாத வரும், நெறி திறம்பியவரும், நோய் உற்றவரும் ஆகப் பலரும் வருதல் இயற்கை. அன்றியும் அக்கால நிலையில் சில சமூகத்தவரை வேறு சில சமூகத்தவர் தீண்டல், தூய்மைக்கு இழுக்கு என்னும் மரபும் இருந்து வந்தது. ஆதலின் அத்தகையோருடன் இவரும் கலந்துவர நேர்ந்தால் தூய்மை இழந்த நிலையில் மனையுட் புகுதல் இழுக்கு எனக் கருதினார்.

ஆத லாலே குளித்தடுத்த
தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசையினைத்
தொடங்க வேண்டும் அதற்குநீ
சீத நன்னீர் முதலான
கொண்டிங் கணைவாய் எனச்செப்பக்
காதல் மனையார் தாமும்அவை
கொணரும் அதற்குக் கடிதணைந்தார்.

[ 25]


'ஆதலால் நீராடிப் புறத்தூய்மை செய்த பின்னரே இல்லத்திற்குள் வந்து வழிபாடு செய்ய வேண்டும், எனவே அதற்கு நீ குளிர்ந்த நீர் முதலியவற்றைக் கொணர்வாயாக!' எனக்கூறினார். அவருடைய மனைவியாரும் அவற்றைக் கொண்டு வருதற்கு விரைவாகச் சென்றார்.

குறிப்புரை: புறந்தூய்மை நீரானும் அகந்தூய்மை அதற்குரிய இறைவழிபாட்டானும் அமையும். இவ்விரண்டிலும் தூயராய் நின்ற வர் அடிகள். ஆதலால் இங்ஙனம் கூறினார். குளிர்ந்த நீரில் குளித்தலே உடற்கும் உள்ளத்திற்கும் ஏற்றதாகும். ஆதலின் 'சீத நன்னீர்' என்றார். 'சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி'(தி. 8 ப. 7 பா. 14) எனவரும் திருமுறையும் காண்க. நன்னீர் முதலான என்றார். உலர்ந்த ஆடை, திருநீறு, கண்டிகை முதலியனவும் அடங்க. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபுடையன.

Go to top
ஆய பொழுது தம்பெருமான்
அருளா லேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ
அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்தணைய
விண்ணோர் பெருமான் கழல்நினைந்து
தூய அன்பர் துயில்கொண்டார்
துயிலும் பொழுது கனவின்கண்.

[ 26]


அவ்வமையத்தில் தம் பெருமானின் திருவரு ளாலோ, அல்லது அவரது உடலில் வழிநடந்து வந்த களைப்பாலோ, இன்ன காரணத்தால் என்று அறியோம்! அச்சிறு பொழுதிலேயே உடன் உறக்கம் வந்து எய்த, தேவர் பெருமானாய சிவபெருமானின் திருவடிகளை நினைந்த வண்ணம் நமிநந்தி அடிகள் உறக்கம் கொண்டார். அங்ஙனம் உறங்கிய அமையத்து அவரது கனவில்,

குறிப்புரை: அடிகள் கூறியவாறு அம்மையார் குளிர்ந்த நீரும் பிறவும் உடன் கொண்டுவரச் சென்றுள்ளார். அதற்கென அவர் எடுத்துக் கொள்ளும் காலம் மிகச் சிறிதெனினும், அதற்குள் அடிய வருக்கு உறக்கம் வந்தது வியப்பாக இருந்தமையின், இது திருவருள் நிகழ்ச்சியாம் என்றார் முன்னம்: பின்னர் உடல் அயர்வோ என்றார், உலகியலுணர்வை உளங்கொண்ட நிலையில்.

மேன்மை விளங்குந் திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு
வருவார் போல வந்தருளி
ஞான மறையோய் ஆரூரில்
பிறந்தார் எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய்என்
றருளிச் செய்தங் கெதிர்அகன்றார்.

[ 27]


மேதகவமைந்த திருவாரூரின்கண் எழுந்தருளி இருக்கும் வீதிவிடங்கப் பெருமானார் தாமே, பெருமை பொருந்திய நமிநந்தியடிகளின் வழிபாட்டை ஏற்பதற்கு வருபவர் போல் எழுந்தருளிவந்து 'திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் ஞான மறையவராய் நம் சிவ கணங்களாம் தன்மையை நாம் காட்ட நீ காண் பாயாக!' என அருளிச் செய்து, அவர் எதிரே மறைந்தருளினார்.

குறிப்புரை: நமிநந்தியடிகள் விழித்து எழுந்ததும் புறத்தூய்மை செய்து அகத் தூய்மையுடன் சிவவழிபாடாற்ற இருத்தலின் அவ் வழிபாட்டை ஏற்பதற்கு வருவார் போல் கனவில் இதுபொழுது வந்தார் என்றார். 'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்' (தி. 7 ப. 39 பா. 10) எனத் தொகை நூல் கூறியதும் காண்க.

ஆதி தேவர் எழுந்தருள
உணர்ந்தார் இரவர்ச் சனைசெய்யா
தேதம் நினைந்தேன் எனஅஞ்சி
எழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி
மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர்
புகுத எதிர்அந் நகர்காண்பார்.

[ 28]


ஆதி தேவரான சிவபெருமான் மறைந்தருள, நமிநந்திஅடிகள் மெய்ம்மை உணர்ந்தவராகி உட்சென்று இரவில் செய்யத்தக்க பூசனையை உடன் செய்யாமல் பிழைபடக் காலம் தாழ்த்திச் செய்ய எண்ணினேன்! என்று அஞ்சி, வழிபாடாற்றி மனைவியாருக்கும் கனவில் நேர்ந்த செய்தியைத் தெரிவித்தார். விடியற்காலையில் விரைவுடன் இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவாரூக்குப் போதர, எதிரில் அப்பெருநகரைக் காண்பவரான அவர்.

குறிப்புரை:

தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத் தனைய மணிகண்டர்
வடிவே யாகிப் பெருகொளியால்
மொய்வைத் தமர்ந்த மேனியராம்
பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத் தஞ்சி அவனிமிசை
விழுந்து பணிந்து களிசிறந்தார்.

[ 29]


தேவர்களின் தலைவராய தியாகேசரின் திருவாரூரில் பிறந்து வாழ்பவர் அனைவரும், கரிய திருக்கழுத்தை யுடைய சிவபெருமானின் திருவடிவை உடையராய்ப் பெருகும் ஒளி மிக்க திருமேனிகொண்டு இலங்கக் கண்டு, தலைமீது கூப்பிய கையின ராய், அஞ்சி, நிலத்தில் படிய விழுந்து வணங்கிப் பெருமகிழ்வு அடைந்தார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

படிவம் மாற்றிப் பழம்படியே
நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார்.

[ 30]


அந்நிலையில் இறைவர் காட்டிய திருக்கோலத்தை மறைக்க, அப்பெருமக்கள் முன் இருந்தபடியே இருப்பதையும் இயங்குவதையும் பார்த்து, இறைவரிடம் 'அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும்' என்று வேண்டி வணங்கித், திருவருளால் தம் திருப்பதியினின்றும் பெயர்ந்து திருவாரூரில் குடிபுகுந்து வாழ்வாராயினர். அங்குத் தங்கி, உலகத்தில் மேன்மேலும் வளர்தற் கான தொண்டுகள் பலவற்றையும் நிகழுமாறு செய்து வரலானார்.

குறிப்புரை:

Go to top
நீறு புனைவார் அடியார்க்கு
நெடுநாள் நியதி யாகவே
வேறு வேறு வேண்டுவன
எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில்
இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர்
விளம்பப் பெற்ற பெருமையினார்.

[ 31]


திருநீற்றினை அணிந்து விளங்குபவரான சிவபெருமானின் அடியவர்களுக்கு நீண்ட காலம் நியதியாக வேறு வேறாக வேண்டுவன பலவற்றையும் செய்து வந்தமையால், உயர்வாகிய சிறப்புடன் மணிப்புற்றை இடமாகக் கொண்டு வாழ்கின்ற இறைவரின் தொண்டர்க்கு ஆணிப் பொன்னாவார் இவர் என்று திருநாவுக்கரசுப் பெருமானின் பாராட்டும் பேற்றையும் பெற்ற பெருமையுடையராயினார்.
c
குறிப்புரை: ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரூ
ரகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம்
பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன்
நமிநந்தி
நீராற் றிருவிளக் கிட்டமை நீணா
டறியுமன்றே. (தி. 4 ப. 102 பா. 2)
என்பது நாவரசர் இவரைப்பற்றி அருளிய சொல் மாலையாகும். பொன்னை உரைத்துப் பார்த்து அதனை மதிப்பிடுங்கல் - 'கட்டளைக் கல்' எனவருவதும் காண்க. அடிகள் நீரால் விளக்கெரித்தமைக்கு அகச்சான்றாய் அமைந்துள்ளது இப்பாடலாகும்.

இன்ன வகையால் திருப்பணிகள்
எல்லா உலகும் தொழச்செய்து
நன்மை பெருகும் நமிநந்தி
அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும்
அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல்மிகும்
வளர்பொற் சோதி மன்னினார்.

[ 32]


இனைய பல நன்மைகளையெல்லாம் பெருகச் செய்து வந்த நமிநந்தியடிகள், எவ்வுலகும் தொழும்படியான திருப் பணிகள் பலவற்றையும் செய்து, சிவமணம் கமழும் திருவீதிகளை யுடைய திருவாரூரின் கண் எழுந்தருளியிருக்கும், தலையில் பிறையும் கங்கையும் சூடும் இறைவரான தியாகேசப்பெருமானின் திருவடி +நிழலில் வளர்கின்ற அழகிய சோதியுள் நிலைபெறச் சேர்ந்தார்.

குறிப்புரை:

நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள்தா மரைநீர் மடுவின்கண்
தனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியின் மீட்பனவே.

[ 33]


நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நன்கு அறியு மாறு முன்னைய நாளில் சிறந்த ஐம்படைத்தாலியை அணிந்த மார்பையுடைய சிறிய மறையவர் மைந்தனைப், புக்கொளியூரில் தாளோடு கூடிய தாமரைகளையுடைய நீர் நிறைந்த பொய்கையில் பெரிய முதலை வாயினின்றும் நல்ல நாளில் மீட்டவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளே தம்மை நினைவார்களை மீளாவழியினின் றும் மீட்பவையாம்!

குறிப்புரை: ஆரூரரும் கழறிற்றறிவாரும் திருக்கண்டியூரிலிருந்து திருவையாற்றிற்குச் செல்ல நினைய, இடைப்பட்ட காவிரியின் பெருக்கு அதற்குத் தடையாக, ஐயாற்றுப் பெருமானை நோக்கிப் பாட அத்தடை நீங்கியது. இருவரும் ஐயாற்றுப் பெருமானை வழிபடும் பேறு பெற்றனர். இவ்வரலாற்றை வகைநூல் கூறி வணங்கிற்று. திருப்புக்கொளியூர் அவிநாசியில் முதலையுண்ட சிறுவனை மீட்ட வரலாற்றை நினைந்து விரிநூல் வணக்கம் கூறிற்று.


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song